Home Articles மாமனிதர் அமரர் கந்தசுவாமி

மாமனிதர் அமரர் கந்தசுவாமி

210

மாமனிதர் அமரர் கந்தசுவாமி

அமரர் சி. கே கந்தசுவாமி அவர்கள் மறைந்த ஓரு ஆண்டு
பூர்த்தி பெற்றுவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நம்மை என்றும் வழிகாட்டிக் கொணடிருந்த ஒருவர் நம்முடன் இல்லை என்பது நம்ப முடியாததொனறாகும்.. இன்றும் அவர் எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

1940-ம் ஆண்டு கொக்குவில் இந்துக் கல்லூரியின் முதற் பட்டதாரி ஆசிரியராகப் பொறுப்பேற்ற அமரர் அவர்கள் 1942 ஆம் ஆண்டு எமது கல்லூரியின் உப அதிபராகப் பதவி உயர்வு பெற்றார் என்றால்; அவருடைய திறமையில் அன்றைய நிர்வாகம் எவ்வளவு நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருந்தது என்பது வெட்ட வெளிச்சமாக எமக்குத் தெரிகிறது.

கல்லூரியின் அதிபர் பதவி 1944 ஆம் ஆண்டிலும் பின்னர் 1950 ஆம் ஆண்டிலும் அவரைத் தேடி வந்த போதும் கல்லூரியின் நன்மை கருதி அமரர் ஷேக்ஸ்பியர் நாகலிங்கம் அவர்களையும், அமரர் ஹண்டி பேரின்பநாயகம் அவர்களையும் வருந்தியழைத்து வந்து கல்லூரி அதிபர்களாகப் பதவியேற்கச் செய்து அவர்களின் கீழ் உப அதிபராகத் தொடர்ந்து பணியாற்றிப் பொறுப்புக்களையெல்லாம் தானே மகிழ்ச்சியுடன் ஏற்று நமது பாடசாலைக்குச் சேவை செய்த மாமனிதர் அமரர் சி. கே. கே அவர்கள்.

மடிப்புக் கலையாத தூய வெள்ளை வேட்டி அதற்கேற்ப தூய வெள்ளை மேலாடை, சால்வை, நெற்றியிலே திருநீறு, நெஞ்சிலே உறுதி முகத்திலே புன்சிரிப்பு, கண்களிலே கனிவு, வார்த்தையிலே வாய்மை என்பவற்றுடன் அதிகாலை முதல் மாலை வரை 30 வருடத்துக்கு மேலாக கொக்குவில் இந்துக் கல்லூரியில் உலவி வந்த கடமை வீரர் இன்று நம்மிடையே இல்லை ஆனாலும் அவர் வகுத்த பாதை கண்களில் தெளிவாகத் தெரிகிறது. கொக்குவில் இந்துக் கல்லூரிக்காகத் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணித்து கல்லூரியின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த அந்தப் பெரு மகனுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? அவருடைய ஞாபகார்த்தமாக கொக்குவில் இந்துக் கல்லுரியில் ஒரு நவீன பயிற்சி நிலையம் உருவாக்கும்பணியை நாம் தொடங்கியுள்ளோம்.
2010 ஆம் ஆண்டு நாம் கொண்டாட இருக்கும் நம் கல்லூரியின் 100 ஆம் ஆண்டு விழாவிற்கு முன்பதாக இந்த நிலையத்தை கணனிகள் போன்ற நவீன கருவிகளுடன் பூரண செயற்பாட்டு நிலையமாகக் கொக்குவில் இந்துக் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

சுமார் 65 வருடங்களாக காக்கும் தேவனாக எங்களுக் வழிகாட்டியாக அமரர் சி. கே. கந்தசுவாமி அவர்கள் பலரும் போற்றப் பெருவாழ்வு வாழந்து இறைவனடி சேர்ந்து விட்டார்.
இன்னும் அவர் துருவ நட்சத்திரமாக எங்களுக்கு வழிகாட்டிக் கொணடிருக்கிறார்.

வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும். – திருக்குறள்

இராசரத்தினம் இராசமகேஸ்வரன்
கொக்குவில் இந்துக் கல்லுரி பழைய மாணவர் சங்கம்
ஐக்கிய இராச்சியம்.

Previous articleLove is God and God is Love.
Next articleA tribute ot Idaikadar by S. Thedchenamoorthy