Home Articles Poems by V. Tharmarajah

Poems by V. Tharmarajah

96

ஓயாத கலைகள்
சுடுகாட்டு மலர்களாய் தினம் குண்டு விழும் பூமியிலும் உண்டு
தறிகெட்டோடும் பெயர்ந்த புலத்திலும் தாராளமாய் உண்டு
நெறிகெட்ட நெஞ்சினரையும் நெகிழ வைக்கும் திறனுண்டு
மாசற்ற மனத்தாரையும் தினம் மகிழ வைப்பதுமுண்டு

சிந்து நதிக்கரை யொரம் மலர்ந்தனவாம்
தென் பொதிகை மலையிலும் தவழ்ந்தனவாம்
குமரி முனையையும் கடந்தனவாம்
கதிர மலையிலம் கமழ்ந்தனவாம்
இன்று பாரெங்கும் வீசும் எம் கலைகள்.

மாயா மாருதியென
தேயாத் திங்களென
காயா ஞாயிறென
சாயாக் குன்றென
ஓயாதெம் கலைகள்

 

நெஞ்சில் நீ நிதமாடும் பரதம்

அதிகாலை அலாரம் அடித்து தூக்கம் கலைந்து
திடுமென விழித்தெழுந்து இடமெது வருடமெது
திகதி எது நாள் எது என்றுணரு முன்னமாகவே
புஸ்ப்பாஞ்சலியாய் வந்து புன்னகைக்கும் நின் முகம்
………
காலைக் கடன் தீர்த்து பல் தேய்த்து உடல் குளித்து
உடுப்பெடுத்து மாற்றி தலை சீவி முகம் திருத்தி
உணவெடுத்து மெல்ல உண்ண முனைந்தால்
அல்லாரிப்பில் வந்து புல்லரிக்க வைக்கும் நின் முகம்
……..
நேரம் போனது தெரிந்து துடித்தெழுந்தோடி
தெரு பல கடந்தோடி படிகள் பல வேறி
தொடரூந்தில் தட்டுத் தடுமாறி ஏறினால்
ஜதிஸ்வரத்திலோர் சுதி சேர்க்குது நின் முகம்
……..
கதியெனும் கதரினுக்கு காலை வணக்கம் சொல்லி
மெல் எனும் மெல்சனுக்கு கிரிக்கெட் கதை சொல்லி
ஆசனத்தில் சென்றமர்ந்தால் மொனிட்டரில் வந்து
காம்போதியில் ஒரு ஸப்தமாக வந்தாடுது நின் முகம்.
………
பாதீட்டோடும் பேரேட்டோடும் காசுப் பாய்ச்லோடும்
பங்குச் சுட்டேண்ணோடும் வட்டி வீதத்தோடும்
இணங்காக் கணக்கோடும் சுணங்காமல் போராட
இராகமாலிகையில் ஒரு வர்ணம் தீட்டுது நின் முகம்
……….
களைப்போடு வீடுவந்து நாடகம் பார்க்கும் தாயை நச்சரித்து
சூட்டோடு ஒரு பானம் சுகமாகப் பருகி முடித்து
பாட்டோடு விசிலடித்து அப்பாடா என்று சாய்ந்தால்
கதனகுதூகலத் தில்லானாவில் என்னைக் கலங்கடிக்குது நின் முகம்
………
நாள்தனை முடித்து நாலையும் எண்ணிப் படுக்கையில் விழுந்து
பலதையும் என் வாலிப மனதில் போட்டுக் குழம்பி
களைத்தும் சோர்ந்தும் தவிக்கும் என் வயது வேட்கைக்கு
என்றுதான் வந்து மங்களம் பாடும் உன் இனிய உறவு
—————————————————————————————————————————-

நேரமில்லை

அன்று அவளைக்
காதலிக்க நேரமில்லை
படிப்போடு அலைந்தேன்
இன்று அவளோடு
கதைக்க நேரமில்லை
இருவரும் வேலையோடு
அலைகிறோம்.

 

கருகும் பயிர்கள்

செந்நீர் பாய்ச்சி
உயிர்பல உரமிட்டு
துயர்மிக சுமந்து
இடர்பல பட்டு
நாம் வளர்த்த
விடுதலைப் பயிர் பற்றி
கண்ணீர் விட்டு
சுதந்திரப் போர்ப் பயிர் வளரத்தோர்க்கு
புரியாமல் போனதென்ன.

——————————————————————————————————————–

இதய தாகம்

சாம்பல் மேட்டில் ஒரு தோட்டம் செய்ய முனைகிறோம்
உள்ளே இருப்பது எதிர்கால விருட்சங்களின் வித்துக்களா?
அல்லது நீறுபூத்த நெருப்புக்களா?

பூகம்பத்தில் பூப்பறித்து பூமாலைகள் செய்கிறோம்
சமாதான தேவதைக்கு சாத்திரப்படி ஒரு சாத்துப்படியாக்க
சென்று சேர்வது தேவதைக்கா?

சூறாவளியில் சுடர் ஒன்று ஏற்றுகிறோம்
அமைதிச் சூரியன் அஸ்தமித்தால்
இது ஒரு அணையாச் சுடரா?

வேற்றுமைத் தீயணைக்க வெதும்பி நிற்கிறோம்
ஒற்றுமை மேகங்கள் மழை தருமா
கிழக்கில் தெரிவது தொடுவானமா?


———————————————————————————-

அமரர் – சி. கே. கந்தசுவாமி

கலைஞர்; பலர்வளர் திண்ணை–அது கற்றவர்
கருத்திலுயர் வண்ணார் பண்ணை–அங்கு
ஆண்டவர் வழிவந்த நன்நெறி கண்ட
அன்னை தந்தையர்க்கு
பிறந்தாய் – அன்பில்
நிறைந்தாய்

ஷெல்லியோடு ஷேக்ஸ்பியரையும் அறிவாய் – கம்பன்
கவியோடு வள்ளுவன் குறளும் தெரிவாய்
விஞ்ஞானம் மெய்ஞானம் எனப்
பலஞானம் கரைகண்டு
தெளிந்தாய் – அறிவில்
உயர்ந்தாய்

கொட்டிலாய் கிடந்த தெங்கள் பள்ளி – அங்கு
கோட்டான்கள் வந்து கொள்ளும் பள்ளி
நின்மதி கெண்டு நிதிசேர்த்து
வானுயர் கட்டிடம்
அமைத்தாய் – அறிவு
சமைத்தாய்

சண்டியர்;; வாழ்ந்த தெங்கள் கிராமம் – பல
சண்டைகள் நடந்ததொரு சமூகம் – அங்கு
அன்பென்றும் அறிவென்றும்
பண்பென்றும் பழக்கங்கள்
விதைத்தாய் – நின்முத்திரை
பதித்தாய்

கிருபாகர சுப்பிரமணியன் ஒருபக்கம் – அந்த
மஞ்சவனப்பதி மருகன் மறுபக்கம் – இருக்கும்
வெள்ளைக் கலைவாணி வதிபதியாள
நல்ல அறிவில் உயர் அதிபதியாக
வந்த சுவாமி – சி கே
கந்த சுவாமி.

வே. தர்மராஜா

Previous articleS. Sukumar – speech at AGM 08
Next article2016 Vasantham